குறுந்தொகை - Kurunthokai

குறுந்தொகை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று, அவற்றுள் முதலில் தொகுக்கப்பட்ட நூல் என்ற பெருமைக்கும் உரியது. நான்கடி சிறுமையும் எட்டடி பெருமையும் கொண்ட நானூறு பாடல்களின் தொகுப்பு இன்னூல் (நூலில் மொத்தம் 402 பாடல்கள் உள்ளன; பாடல்கள் 307-ம், 391-ம் விதிவிலக்காய் ஒன்பதடி உடையன!)

என் அறிவிற்கு எட்டியவரை, நான் கற்றுணர்ந்தவரை இன்னூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தும், உரை எழுதியும் இப்பதிவில் இடுகைகளாக இடவுள்ளேன் - படித்து மகிழ்க, மறக்காமல் தங்களின் மதிப்பான கருத்துக்களையும் பதிவு செய்க! நன்றி!

Kurunthokai is one among the Eight Anthologies, some of the oldest literature of Tamizh (c. 200 BC to 200 AD), and is probably the very first to be compiled. There are a total of 402 songs of 4 to 8 lines in length (songs 307 and 391 are exceptions with 9 lines.)

I am, with my very own perception and experience of reading these songs, going to post the English translation of these songs with necessary explanations in here - Read and enjoy, and don't forget to leave your valuable comments! Thanks!

இருமொழி வலை - Bilingual Blog

இந்த வலைதளம் தமிழ் ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் தரப்பட்டுள்ளது. பெரும்பான்மை இரண்டு மொழியில் உள்ள செய்திகளும் ஒன்றேதான் (தமிழ் தகவு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.) ஆகவே, தாங்கள், தங்களுக்கு விருப்பமான அல்லது வசதியான, ஒரு மொழியில் உள்ளவற்றை மட்டும் படித்தால் போதுமானது! (எனினும் தாங்கள் இருமொழி புலமையும் உடையவரெனின் இரண்டையுமே படித்து என் மொழிபெயர்ப்பைப் பற்றிய தங்கள் கருத்துகளையும் இடலாம்!) நன்றி!

This Blog is rendered in both Thamizh and English. The content in both the languages are, almost, the same (Tamizh version being translated in to English.) Hence, it would be enough if you read in one of the languages - as per your preference and convenience! (However, if you are well versed in both the languages then you can read both and leave your comments regarding the translation!) Thank you!

புதன், 7 ஏப்ரல், 2010

காந்தள் குன்றம் - The Kaanthal (Rich) Hill!

குறுந்தொகையின் முதல் பாடல், தலைவியை கண்டு காதல் கொண்ட தலைவன் அவளோடு தன்னை சேர்த்துவைக்க சொல்லி கொஞ்சம் காந்தள் மலர்களைத் தலைவிக்காக “கையுறையாக” (காதல் லஞ்சம்!) கொடுக்க, அதை வாங்க மறுத்து (அதன்வழி காதலுக்கு உதவவும் மறுத்து) தொழி கூறுவாதாக அமைந்த பாடல் இது.

(பாடல் : 1; திணை : குறிஞ்சி; துறை : தோழி கையுறை மறுத்தல்)

தலைவனின் கையுறையை மறுக்கும் தோழி அதற்கு தரும் காரணமும், அதை கூறிய விதத்தில் பொதிந்துள்ள ‘நக்கலும்’ மிகவும் சுவைக்கத்தக்கவை, முதலில் பாடலைக் காண்போம்...
செங்களம் படக்கொன்று அவுணர்த் தேய்த்த
செங்கோல் அம்பின் செங்கோட்டு யானை
கழற்றொடி சேஎய் குன்றம்
குருதிப் பூவின் குலைக் காந்தட்டே!
       - திப்புத்தோளார்
 (போர்க்)களம் செம்மை (சிவப்பு) ஆகும்படி அரக்கரை (அவுணர்) அழித்த (தேய்த்த) செம்மையான கோலையுடைய அம்பையும், செம்மையான தந்தத்தை (கோடு - கோட்டு) உடைய யானையையும் கொண்ட, அவிழ்கின்ற வீரவளையலை (கழற்றொடி - கழல்+தொடி : கழலுதல் - அவிழுதல், தொடி - வளையல்) கையில் அணிந்த சிவந்த நிறமுடையவனின் (சேய் - முருகன்) இந்த குன்றிலே குருதியைப் (இரத்தம்) போன்ற நிறமுடைய காந்தள் பூக்களின் கொத்துக்கள் (குலை) நிறையவே உள்ளன (அதனால் நீ தரும் காந்தள் கையுறை எங்களுக்கு அரிதல்ல, அது வேண்டாம்!)

‘நினது காந்தள்  எங்களுக்கு அரிதல்ல, முருகனுக்குச் சொந்தமான எங்கள் குன்றிலேயே அது நிறைய உள்ளது’ என்று கூறி தலைவனின் கையுறையை மறுத்த தோழி தனது சொல்லாட்சியின் திறத்தால் அக்கையுறையை சற்றே இழிவுபடுத்தியும் காட்டுகிறாள்! எப்படி?

’செங்களம்’, ’செங்கோல் அம்பு’, ’செங்கோட்டு யானை’, ’சேய் குன்றம்’ என்று போர்க்களம், அம்பின் கோல், யானையின் கோடு (தந்தம்), குன்று என இயல்பில் சிவப்பு அல்லாத அனைத்தையும் ’செம்மை’ என்று அடைகொடுத்து கூறிவிட்டு, இயல்பிலேயே சிவப்பான காந்தள் பூவை ‘செங்காந்தள்’ எனக்கூறாமல் ‘குருதிப் பூ’ (குருதி போல் சிவந்த பூ) என்று கூறுகிறாள்! இயற்கையாய் சிவப்பு நிறம் உடைய காந்தள் ‘குருதிப் பூ’வாம், குருதி பட்டதால் சிவப்பு நிறம் பெற்ற களமும், அம்பும், யானையின் கோடும் ‘செம்மை’யாம், இதைவிட அக்கையுறையை இழித்துக்கூற இயலுமா?

குறுந்தொகையின் கடவுள் வாழ்த்துப் பாடல் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டது என அதன் உரையில் கூறினோம், அவ்வாறு அது சேர்க்கப்படாது இருந்திருந்தால் இந்தப் பாடலே (மறைமுக / குறிப்பு) கடவுள் வாழ்த்தாய் அமையும் தகுதி உடையது, காரணம் இது முருகப்பெருமானின் பெருமைகளைக் குறித்து நிற்கிறது!

முருகனும் அவனைச் சார்ந்தவையும் செம்மை உடையன என்பதைக் கடவுள் வாழ்த்தில் கண்டோம், “செம்மை” நிறம் இப்பாடலில் பொருள்செறிவோடு பயன்படுத்தப் பட்டிருப்பதையும், கடவுள் வாழ்த்தில் “செம்மை” என்பது நேரடியாய் குறிக்கப்படாமையும் காண்க!

===

Hero* sees Heroine* and falls in love with her and seeks the help of her friend to attain heroine's love and hands to her a bunch of Kaanthal flowers as a love-token, but the friend refuses his love-token (thereby refusing to help his love), Kurunthokai's first song is the reply of the heroine's friend refusing the love-token.

(Song : 1; Class* : Kurinji - Hills and its surroundings; Scene Set* : Heroine's Friend refusing Hero's love-token)

When Heroine's Friend refuses Hero's love-token, the reason she gave for that and the way she redicules the gift are very interesting ones, before going into them, let's see (my translation of) the song first...
Slaying demons making field red
With big-red-arrow, red-tusked elephant
Loose braceleted Red One's hill
Is rich with blood Kaanthal clusters!
    - Thippuththoalaar
This hill, which belongs to the Red One (Lord Murugan) who has the long red arrow and the red tusked elephant (both red are due to blood) that slayed demons (Soorabathman and others) in war making the battle field red (with blood) and who wears a loose bracelet in his hands (as a sign of his bravery), is rich with blood colored Kaanthal flowers (and so we don't need the flowers which you are giving as love-token!)

The Friend who refused the love-token saying, 'The Kaanthals you're giving us is not that rare to us, we do have it plenty in our hill - which belongs to Lord Murugan', is also rediculing the gift with her word-handling power! How?

She refers to the battle-field, arrow, elephant's tusk and her hill - which are not naturally red but are red in color due to blood-wetting - with the adjective 'Red' as 'Red Field', 'Red Arrow', 'Red Tusk' and 'Red One's Hill' respectively, but at the same time she's is referring to the Kaanthal - which is naturally red in color - as 'Blood Kaanthal' (meaning 'Kaanthal that is of blood's color' - i.e Red). Kaanthal which is actually red became 'Blood Kaanthal' and things which became red due to blood are said to be red, can there be a more elegant way to redicule the love-token?

It was already said that the Ode to God of Kurunthokai was composed in a later time (during the compilation of the book), suppose if it was not been composed, this song has the qualification of being the Ode to God (at least in a indirect way), for it mentions the might of Lord Murugan!

We saw, in the Ode to God, that Lord Murugan and things associated with him are red in color, and that fact is very intellectually used in this song. We should also note that the word 'red' is not directly used in the Ode to God (this holds for the Tamizh version; forgive me for inevitably using it in my translation!)

*These are some of the technical terms unique for Tamizh literature. If you don't get them, don't worry, I'll be soon writing a post explaining these.

8 கருத்துகள்:

  1. சுவைத்"தேன்"


    நேரம் கிடைக்கும் பொழுது இன்னும் பல இடுகைகளைப் பதிவு செய்ய வேண்டுகிறேன்.

    உங்களின் மொழியாக்கம் நன்றாக இருக்கிறது, நடைமுறையில் இலஞ்சம் என்பதற்கு கையூட்டு என்றும் hand gloves என்பதற்கும் கையுறை
    என்றும் அழைக்கின்றோம்.

    அன்புடன்
    திகழ்

    பதிலளிநீக்கு
  2. நன்றி திகழ்... முழு குறுந்தொகையையும் இடும் எண்ணத்தில் உள்ளேன், தங்களைப் போன்றவர்களின் ஆதரவிலும், இறைவனின் அருளாலும்!

    பதிலளிநீக்கு
  3. மிக மிக அருமையான விளக்கம் விஜய். அதுவும் செம்மை என்ற அடைமொழி காந்தளுக்குத் தரப்படாததை ஊன்றிக் கவனித்துச் சொன்னது மிகவும் அருமை!

    திகழ்,

    தற்காலத் தமிழில் நீங்கள் சொல்பவை சரியே. ஆனால் ஐநூறு ஆண்டுகளுக்கு முன் வரை கூட (வைணவ வியாக்கியான இலக்கியங்களிலும்) கையுறை என்ற பயன்பாடு இருக்கிறது. சில இடங்களில் இலஞ்சம் என்ற பொருளிலும் சில இடங்களில் காணிக்கை என்ற பொருளிலும். இங்கே 'தோழி கையுறை மறுத்தல்' என்று துறையைச் சொல்லும் போது இலஞ்சம், காணிக்கை இரண்டிற்கும் இடையே ஏதோ ஒன்றைக் குறிப்பது போல் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  4. /குமரன் (Kumaran) சொன்னது…


    திகழ்,

    தற்காலத் தமிழில் நீங்கள் சொல்பவை சரியே. ஆனால் ஐநூறு ஆண்டுகளுக்கு முன் வரை கூட (வைணவ வியாக்கியான இலக்கியங்களிலும்) கையுறை என்ற பயன்பாடு இருக்கிறது. சில இடங்களில் இலஞ்சம் என்ற பொருளிலும் சில இடங்களில் காணிக்கை என்ற பொருளிலும். இங்கே 'தோழி கையுறை மறுத்தல்' என்று துறையைச் சொல்லும் போது இலஞ்சம், காணிக்கை இரண்டிற்கும் இடையே ஏதோ ஒன்றைக் குறிப்பது போல் தோன்றுகிறது./


    நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  5. திகழ் & குமரன்,

    முதற்கண் இடுகையைப் படித்தமைக்கு மிக்க நன்றி! தொடர்ந்து படித்து ஆதரிக்க வேண்டுகிறேன் (ஆழ்ந்த சூடான சுவையான கலந்துரைகள் மூலம் நமது புரிதலை மேலும் நுண்ணியதாய் செய்யவும் வேண்டுகிறேன்! மிக தாமதமாய் பதிலளிப்பதற்கு மன்னிக்கவும், தேர்வு காலமாதலால் சற்றே வேலை அதிகம் - நேரம் குறைவு!)

    ‘கையுறை’ பற்றி பேசுகையில், ஒரு விதயத்தை நாம் மனதில் கொள்ள வேண்டும் என்று சுட்ட விரும்புகிறேன், சங்க இலக்கியங்கள் (அதற்கு பின்னரும் சில காலம்வரை இருந்த இலக்கியங்கள்) ”தலைவன்-தலைவி” என்று அகப்பாடல்களில் குறிப்பது மிக இளைய பருவத்தினரை, ஆதலினாலேயே ஒரு கொத்து பூவிற்கு அவர்கள் மயங்கினர். இந்த வகையில் பார்த்தால் திகழ் சொன்னது மிகப் பொருத்தமாய் இருக்கிறது! ‘கையுறை’ - காதல் கையூட்டு (இந்தச் சொல்லும் ‘கை’ என வருவதைக் காண்க! ‘கை’ என்பது தொழிலைக் குறிக்கிறது, கையால் வாங்கப்பெற்று, ஒருவருக்கு ஏதுவாய் ஒரு தொழிலை முடித்துத் தர கொடுக்கப்படுவது!)

    பதிலளிநீக்கு
  6. எனக்கொரு டவுட்டு.. ஆக்சுவலி தோழி எதற்காகத் தலைவனைப் பழிக்கிறாள்?

    தலைவன் அடிக்கடித் தலைவியை இவ்வாறு சந்தித்துப் பேசுவதை வேண்டாம் என நினைத்தா? அல்லது,

    அது இரவு நேரம் என வைத்துக்கொண்டு, தலைவனைப் பார்த்து, ‘நீ பகலில் வந்தால் இங்கு எல்லாமே செங்காந்தல் மலர்கள் இருப்பதை உணர்வாய்’ என்று அவர்கள் யாரும் அறியாமல் சந்திப்பதை குத்திக் காட்டுகிறாளா? அல்லது,

    பெண்கள் ஆண்கள் காட்டும் காதலை எளிதில் ஏற்காமல் கொஞ்சம் ‘பிகு’ பண்ணுவது போல் இது எழுதப்பட்டதா? அல்லது

    வேறு என்ன காரணம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுபத்ரா,
      கருத்துரைக்கும், ஐயங்களுக்கும் முதற்கண் நன்றி :-)

      பாடலைப் பொறுத்தவரை கூற்று நிகழ்ந்தது பகலிலா அல்லது இரவிலா என்பது வெளிப்படையாகவோ, குறிப்பாகவோ இல்லை... எனினும், தலைவன் இன்னும் தலைவியின் காதலை (குறிப்பாய் அன்றி வெளிப்படையாய்) அடையவில்லை என்பதை வைத்து நோக்குங்கால் அது பகல் என்றே கொள்ள நான் விரும்புகிறேன்...

      பொதுவாக சங்க இலக்கியத்தின் அகப்பாடல்களைக் கவனித்தால் அவற்றில் பெரும்பான்மை (கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு) பாலை சார்ந்த துயர் நிறைந்த பாடல்களே உள்ளன... தலைவன் தலைவி காதல் மிகுந்த தொல்லைகளுக்கு உள்ளாவது... அதிலும், தலைவனை வரைவுகடாவி (திருமணம் செய்ய வறுபுறுத்தி) அவனை அதற்கு ஒற்றுக்கொள்ள வைத்து, அதற்காய் அவன் பொருள்வயின் பிரிந்து, மீண்டு வந்து வரைந்துகொள்வதற்குள் தலைவியும் தோழியும் ‘போதுமடா சாமி’ என்று பெருமூச்சுவிடும் நிலைக்கு ஆளாவதைக் காணலாம்!

      இது ஒரு காரணம்...

      மேலும், நீங்கள் இறுதியில் சொன்னது போல், ஆண்களின் காதலை ஏற்க பெண்கள் ‘பிகு’ செய்வது இயற்கையின் நியதி... (இது ஒருவகை ‘Selection’ செயல்முறை, மிகுந்த ஏற்புடைய ஒரு சந்ததியை உருவாக்க ஆண்களை மிகுந்த கவனத்துடன் தேர்ந்தெடுக்கும் உள்ளுணர்வை எல்லா உயிரினத்தின் பெண்களும் கொண்டுள்ளனர்!)

      இன்னும் சிந்தித்தால் வெவ்வேறு காரணங்களும் கிடைக்கலாம்... இதுதான் என்று அடித்துச் சொல்ல அந்த தோழியேதான் வரவேண்டும் :-) (அல்லது திப்புத்தோளார்!)

      வினாக்களை எழுப்புவதாலும், அவற்றிற்கு விடை முயல்வதாலும் இன்னும் ஆழக் கற்கிறோம்... அவ்வகையில் ஒரு வாய்ப்பை வழங்கி உதவியமைக்கு நன்றி...

      நட்புடன்,
      விஜய் :-)

      நீக்கு